பாரம்பரியம்! ரூ.10,000 பரிசு பெற்ற வாரமலர் கதை:

சமீபகாலமாக, அதிகாலையில் எழுந்திருப்பது சற்று ஆயாசமாக இருந்தது, வள்ளியம்மாளுக்கு. வயது, 70ஐ நெருங்கிக் கொண்டிருந்தாலும், ராகி களியும், கம்மஞ்சோறு, சோளச்சோறு மற்றும் தினையும் தின்று வளர்ந்த உடம்பு, திடகாத்திரமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை தான்.

தற்போது கூட, ஒருவேளை, ராகியோ, கம்போ உணவில் சேர்க்காவிடில், ஏதோ போல் உணர்வாள், வள்ளியம்மாள்.

''அம்முச்சி... மாமா, வண்டியில் போற போது, டெம்போ மோதி, மண்டையில அடியாம். கோவை ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்காங்களாம். அம்மா, உங்கள உடனே கூட்டிட்டு வரச் சொன்னாங்க.''

பதற்றமாய் வந்த, மகள் வயிற்றுப் பேரனின் வார்த்தைகளில் தடுமாறினாள், வள்ளியம்மாள்.

பாசத்தைக் கொட்டி, ஆசையாய் வளர்த்த அருமை மகன் கோபாலை பார்த்து, ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன், மனைவி பேச்சு கேட்டு, பிள்ளைகளைப் படிக்க வைக்க, நல்ல பள்ளி வேண்டும் என்று, மாமனார் குடியிருந்த சரவணம்பட்டிக்கு அருகில் குடியேறினான்.

எப்போதாவது ஊருக்குள், நல்லது, கெட்டதுக்கு வரும்போது, அம்மாவைப் பார்த்துச் செல்வான். 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் பேரன்களின் படிப்பைக் காரணம் காட்டி, ஊருக்கு வருவதைத் தவிர்த்தாள், மருமகள் அர்ச்சனா.

மாற்றுச் சேலை கட்ட நேரமில்லாமல், நரைத்திருந்த கூந்தலை சுழற்றி கோடாலி கொண்டையிட்டு, பேரனின் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். மகள் தேன்மொழியின் வீட்டை அடைவதற்குள், வாடகை வண்டி பிடித்து தயாராயிருந்தார், மருமகன் வேலு.

வண்டி ஏறியதும், கோவை மருத்துவமனைக்கு சீறிப்பாய்ந்தது. மகனுக்கு ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்று மாரியம்மனை வேண்டினாள். மனதில் கடந்த கால கசப்பான சம்பவங்கள் நெஞ்சுக்குழியில் நிழலாட, கண்களின் ஓரம் நீர் கசிந்தது.

மகள் தேன்மொழியை வேலுவின் கையில் பிடித்துக் கொடுத்த கையோடு, இரண்டே மாதத்தில், ஒரு நள்ளிரவில், நெஞ்சு வலிக்கு கணவனை பலி கொடுத்தாள்.

கணவன் விட்டுச்சென்ற, 3 ஏக்கர் நிலத்தில் உழைத்தாள். கோவை சரவணம்பட்டியிலுள்ள, ஐ.டி., கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருக்கும், மகன் கோபாலுக்கு, பட்டப்படிப்பு முடித்த அர்ச்சனாவை, மருமகளாக்கிக் கொண்டாள், வள்ளியம்மாள்.

பாரம்பரிய வாழ்க்கை முறையில் அதீதப்பற்றுக் கொண்ட வள்ளியம்மாளுக்கும், படித்த அர்ச்சனாவுக்கும், ஆரம்பத்திலிருந்தே ஒத்து வரவில்லை.

'ஏங்க, உங்க அம்மா கம்மஞ்சோறு, சோளச்சோறு, தினைசோறுன்னு எதை எதையோ சமைக்கிறாங்க; உடம்புக்கு நல்லதுன்னு என்னையும் சாப்பிட சொல்றாங்க. இதெல்லாம் என்னால சாப்பிட முடியாது...' என, புகார் பட்டியல் வாசித்தாள், அர்ச்சனா.

அவளை சமாதானப்படுத்துவான், கோபால்.

ஏகப்பட்ட சமாதானங்களுக்கு இடையே, முதல் பிரசவத்தில், ஆண் பிள்ளை பெற்று, வீட்டுக்கு வந்த மருமகளை, உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாள், வள்ளியம்மாள்.

'உங்க அம்மா ஒரு பைத்தியம். குழந்தையை குளிப்பாட்டுறப்ப, ஏதோ இலைகளை அரைச்சு பூசுறாங்க. 'பேபி சோப்' போட்டு குளிக்க விட மாட்டேங்கிறாங்க. டாக்டர்கிட்ட கேட்டா, 'இதெல்லாம் செய்யக்கூடாது'ங்கிறார்...' என்றாள், அர்ச்சனா.

'அது, துளசி, வேம்பு, வசம்பு, வெந்தயம், எலுமிச்சை மற்றும் ஆவரம்பூ கலந்த கலவை. ஒண்ணும் ஆகாது; பயப்படாதே...' என்று, ஆறுதல் சொன்னான், கோபால்.

பேபி சோப்பும், பேபி ஆயிலும், பேபி பவுடரும் பயன்படுத்தாமலேயே, குழந்தை வாசனையாகத் தான் இருந்தது.

ஆண்டிற்கு இரண்டே புடவையோடு, தோட்டத்து தேங்காய், காய்கறிகளையும், வீட்டு பயன்பாடு போக, மீதம் உள்ள பசும்பாலையும் காசாக்கினாள். சிறிது சிறிதாக சேமித்து, மகளுக்கு செய்ய வேண்டிய நல்லது, கெட்டது எல்லாம் செய்து, வங்கியில் கணிசமான தொகையைச் சேமித்திருந்தாள், வள்ளியம்மாள்.

முகத்தை பளபளப்பாக்க, 'பேஷி'யலுக்கும், விதவிதமான ஆடை மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி குவிக்க ஆசைப்பட்டு, கணவனின் வருமானத்தைக் கரைத்தாள், அர்ச்சனா. இதனால், அர்ச்சனாவிற்கும், வள்ளியம்மாளுக்கும் இடையே ஒட்ட வைக்க முடியாத அளவிற்கு விரிசல் பெரிதாகிக் கொண்டே போனது.

தாய் வீடு சென்ற அர்ச்சனா, அங்கேயே தங்கி விட்டாள். குழந்தைகள் வளர வளர, வேறு வழியின்றி, மாமியார் வீட்டிற்கு அடுத்த தெருவில், வீடு பார்த்து தனிக்குடித்தனம் வந்தான், கோபால்.

அம்மாவுடனான தொடர்பு படிப்படியாக குறைந்த நிலையில், வேலை பார்த்து வந்த, ஐ.டி., கம்பெனியில், ஆள் குறைப்பு என்ற பெயரில், கோபாலை வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

வேறு வேலை தேடுவதற்குள், வாடகை, ஸ்கூல் பீஸ், வீட்டு செலவு, குழந்தைகளின் வைத்திய செலவு மற்றும் மாத தவணையில் வாங்கிப் போட்டிருந்த பொருட்களுக்கான தவணை என, கடனும், வட்டியும் சேர்ந்து விட்டது.

வள்ளியம்மாள் நிலத்தை விற்க பேச்சுவார்த்தை:
(மகன் மருமகள் கேட்ட பங்கு)

'எதுக்கு மாப்பிள்ளை இத்தனை சிரமப்படுறீங்க? பசங்க இங்க படிக்கிறாங்க, ஊர்ல இருக்கிற நிலத்தை விற்று, கடனை எல்லாம் அடைச்சுடுங்க. இங்கேயே ஒரு வீட்டை வாங்கி, சொந்தமாக்கிட்டா, மாத வாடகையாவது மிச்சமாகும்...' என, மாமனார் துாபம் போட, கோபாலுக்கு நல்ல யோசனையாக தெரிந்தது.

அம்மாவிடம் சென்று, நிலம் விற்க வேண்டியதை பற்றிப் பேச. கொதித்துப் போனாள், வள்ளியம்மாள்.

'ஏன்டா, தாத்தன், பாட்டன் பூமியை வித்துத் திங்கிறது, ஒரு பொழப்பா? பசங்கள கூட்டிட்டு இங்கே வா, நான் பார்த்துக்கிறேன். இந்த நிலம், என் பேரப் பிள்ளைகளுக்குத் தான்; உனக்கில்லை போடா...' என, விரட்டியடித்தாள், வள்ளியம்மாள்.

புதிதாக சேர்ந்த வேலையில், ஓரளவிற்கு வருமானம் இருந்தாலும். ஐ.டி., கம்பெனிகள் நிறைந்த சரவணம்பட்டியில் இடமும், வீடும் வாங்கத் துடித்தாள், அர்ச்சனா. அவளின் நச்சரிப்பு தாங்காமல், தங்கையிடமும், மாப்பிள்ளையிடமும் தஞ்சம் அடைந்தான், கோபால்.

தேன்மொழியும், வேலுவும், கோபாலின் நிலையை புரிந்து கொண்டனர்.

'ஏம்மா இப்படி பிடிவாதம் பிடிக்கிற... அண்ணன் படற கஷ்டத்தை காதால கேட்க முடியல. இந்த காலத்துல, ரெண்டு பசங்களையும் நல்ல ஸ்கூல்ல படிக்க வெச்சு, வாடகை வீட்டில் காலம் தள்ளுறது ரொம்ப சிரமம்.

'அண்ணனோட கஷ்டம் உனக்குப் புரியாதும்மா. குடும்பத்துல பல பிரச்னைகளால, சிரமப்படறார். இப்ப உதவாம, இந்த நிலத்தை வச்சுக்கிட்டு, என்ன பண்ணப் போறீங்க? பின்னால அவருக்குத்தான கொடுக்கப் போறீங்க...' என்றாள், தேன்மொழி.

மாப்பிள்ளையும், மகளும் பரிந்து பேச, வேறு வழியின்றி, நிலத்தை விற்க சம்மதித்தாள், வள்ளியம்மாள்.

'சரி, நீங்க சொல்றதால ஒத்துக்கறேன். ஆனா, ஒண்ணு... நிலத்தை விக்கிற பணத்தை மூன்றாக பிரித்து, ஒரு பங்கை நீங்க வாங்கிக்கணும்; என் பங்கு எனக்கு வேணும்...' என, கறாரும் கண்டிப்புமாக பேசும் அம்மாவை, எதிர்க்க முடியாமல் அடங்கிப் போயினர், வேலுவும், தேன்மொழியும்.

கோபால் மூலம் செய்தியை கேள்விப்பட்ட அர்ச்சனா, கோபத்தில் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தாள்.

'காலம் போன காலத்தில், கிழவிக்கு பணத்தாசையை பாரு. ஏதோ சோத்துக்கு கொஞ்சம் பணத்தை எடுத்தாலும் பரவாயில்லை; கிழவியோட ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்...' என்றாள்.

ரியல் எஸ்டேட் வியாபாரிக்கு, விலை பேசி, நிலம் விற்கப்பட, தேன்மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை பெற சம்மதிக்கவில்லை, வேலு.

'நாம, நல்லாதானே இருக்கோம். ஒரு கஷ்டத்துக்கு உதவவில்லை என்றால் அப்புறம் என்ன உறவு வேண்டிக்கிடக்கு. உன் பங்கை, உன் அண்ணனுக்கே கொடுத்துடு...' -என்றான், வேலு.

மருமகன் பேச்சை, திடமாக மறுத்து, 'என் பொண்ணுக்கு, சொத்தில் பங்கு வேண்டாம் என்றால், அது என்கிட்டயே இருக்கட்டும்...' என்று அடித்துப் பேசி, தேன்மொழியின் பங்கையும் தனதாக்கினாள், வள்ளியம்மாள்.

தன் பங்கு பணத்துடன், வீடு சென்ற கோபால், அர்ச்சனாவிடம் நடந்ததைக் கூற, அன்றிலிருந்து ஒரேயடியாக மாமியாரை ஒதுக்கித் தள்ளினாள், அர்ச்சனா.

ஒரு நல்லது, கெட்டதுக்கு, ஊருக்கு வந்தால் கூட, கிழவியை பார்க்காமலே செல்லும் அளவிற்கு, வஞ்சத்தை நெஞ்சில் வளர்த்துக் கொண்டாள்.

ஓரிரு ஆண்டுகளிலேயே, தன் பரம்பரையை வாழ வைத்த நிலம், வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு, கான்கிரீட் கட்டடங்களான வினோதத்தைப் பார்த்து, ரணமானாள், வள்ளியம்மாள்.

மருத்துவமனைக்குள், மகனை படுக்க வைத்திருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் மருமகனோடு சென்றாள், வள்ளியம்மாள்.

''என்ன செய்யிறதுன்னு தெரியலை, தேனு... தலையிலும், கழுத்திலும் பலமான அடி. வலது காலில் எலும்பு முறிந்திருக்கிறது. உடனே, ஆபரேஷன் செய்யணும்; லட்சக்கணக்கில் செலவாகுமாம். குறைந்தது மூன்று மாதமாவது மருத்துவமனையில் இருக்க வேண்டுமாம்.

''நண்பர்களின் பேச்சைக் கேட்டு, நிலம் விற்ற பணத்தையெல்லாம்,'ஷேர் மார்க்கெட்'ல போட்டுட்டாரு, உங்க அண்ணன். ரெண்டு பசங்களோட நடுத்தெருவுக்கு வந்துட்ட மாதிரி இருக்கு,'' கண்ணீர் வழிய புலம்பினாள், அர்ச்சனா.

அவசர சிகிச்சை பிரிவிலிருந்த, கோபாலை பரிசோதித்து விட்டு, நர்சுடன் வெளி வந்தார், மருத்துவர்.

''கோபாலோட, 'அட்டெண்டர்' யார், பணம் கட்டிட்டீங்களா? நாளைக்கு ஆபரேஷன், பணத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க,'' என்றாள், நர்ஸ்.

நர்சின் குரல், அர்ச்சனாவின் காதுகளில் விழுந்து, கலக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

மருத்துவ சேவை என்ற பெயரில் பணக்கட்டுக்களை பத்திரப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும், மனிதம் தொலைத்த நவீன மருத்துவத்துறையின் முகம், அர்ச்சனாவிற்கு அச்சமூட்டியது.

ஆவேசம் வந்தவள் போல், தன் வயதையும் மறந்து, தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, மருத்துவரின் இரு கால்களையும் இறுகப்பற்றினாள், வள்ளியம்மாள்.

''எம் பையனை, எப்படியாச்சும் காப்பாத்திடுங்க ஐயா... என்ன செலவானாலும் பணத்தை நான் கட்டுறேன்,'' என, கதறியவளை துாக்கி நிறுத்தினார், மருத்துவர்.

அவர் கண்களில் துளிர்த்த நீர், மருத்துவர்களிடம் இன்னும் மனிதாபிமானம் முற்றிலுமாக மரணித்துப் போகவில்லை என்பதை பறைசாற்றும் விதமாய் இருந்தது.

வள்ளியம்மாளின் வங்கி சேமிப்பிலிருந்த பல லட்சங்களை விழுங்கி, குணமாகி வீடு திரும்பினான், கோபால். பழையபடி பணிக்கு திரும்ப இன்னும் ஓரிரு மாதங்களாகும் நிலையில் இருந்தது, அவன் உடல்நிலை.

அவனைப் பார்க்க தன் கணவனோடு சென்றாள், தேன்மொழி.

''அண்ணா, அம்மாவிற்கும் வயதாகிடுச்சு; டவுன்ல வந்து உன்னோட இருக்க முடியாது. என்னோடவே இருக்கட்டும். அம்மாவிடம் இருந்த பணத்தில், உன் மருத்துவ செலவு போக மிஞ்சியதை, இரண்டு பேரன்களின் பெயரிலும், தலா, 10 லட்சம் ரூபாய் போட்டிருக்காங்க.

''அதிலிருந்து வரும் வட்டியை, அவர்களின் படிப்புச் செலவிற்கு பயன்படுத்திக்கச் சொன்னாங்க. அதனால், உன் பசங்க படிப்பைப் பற்றி, நீ கவலைப்படாத. மிச்சமிருந்த, 10 லட்சத்தை தன் பேர்ல, 'டெபாசிட்' பண்ணி, உங்க ரெண்டு பேரையும் வாரிசா போட்டிருக்காங்க.

''நம் நிலத்தை வாங்கினவன், 'சைட்' போட்ட உடனேயே, அவங்ககிட்ட இருந்த பணத்தை வச்சு, ஏழு, 'சைட்' வாங்கிப் போட்டுருக்கு. இப்ப எனக்கு ஒரு, 'சைட்'டை எழுதிக் கொடுத்துட்டாங்க.

''மீதி உள்ள ஆறு, 'சைட்'களையும், ஆளுக்கு மூன்றாக பிரித்து, உன் பிள்ளைகளுக்கு உயில் எழுதிட்டாங்க. அம்மா வாங்குறப்ப, ஒரு சென்ட், 30 ஆயிரம் ரூபாயாக இருந்த இடம், இப்ப சென்ட், 3 லட்சத்துக்கு மேல விலை போகுது.

''உன் பசங்களுக்கு உள்ள ஆறு, 'சைட்'டும் சேர்ந்து மொத்தம், 35 சென்ட் வருது. அம்மா குடியிருந்த பழைய வீட்டையும், உன் பேருக்கு உயில் எழுதிக் கொடுத்துட்டாங்க. இந்தா பாரு,'' என, வங்கி புத்தகங்களையும், பத்திரங்களையும், கோபால் முன் வைத்த தேன்மொழியை, கண்ணீரோடு பார்த்தாள், அர்ச்சனா.

தன் குடும்பம் தழைச்சு நிலைக்க, வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, உழைப்பதிலும், சேமிப்பதிலும், படிக்காத பாமர தாய்க்கு இருந்த தீவிரம், படித்த தனக்கோ, தன் மனைவிக்கோ இல்லாமல் போனது ஏன் என்று, புரியாமல் விழித்தான், கோபால்.

கதை எழுதியவர் குறிப்பு:

க.பழனிசாமி

வயது: 59. படிப்பு: எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.பில்., - பி.எட்.,

சொந்த ஊர்: தெக்கலுார் - திருப்பூர் மாவட்டம்.

இவரது, நுாற்றுக்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. இதுதவிர, பட்டிமன்ற பேச்சாளர், பரதநாட்டிய கலைஞர் மற்றும் பேச்சரங்கங்களில் பங்கு பெற்றும் வருகிறார்.v பெற்றுள்ள விருதுகள்: 2018ல், மாநில அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் - நல்லாசிரியர் விருது; திருப்பூரில் உள்ள தமிழ்நாடு தமிழ் சங்கம் வழங்கிய விருது என, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

லட்சியம்: இந்திய கலாசார மரபுகளை காப்பாற்றும் வகையில் பேசுவது, எழுதுவது.

கதைக்கரு பிறந்த விதம்: நாகரிக மோகத்தில் ஆடம்பர செலவில் சொத்துக்களை இழந்த மகனையும், மருமகளையும் ஒதுக்கிவிட்டு, பேரக்குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்த எங்களோடு வாழ்ந்து மறைந்த, வள்ளிப் பாட்டியின் உண்மை கதை.