அன்னபூரணி கைமுறுக்கு!
நகரத்தின் ஒரு மூலையில் இருந்த நொறுக்குத் தீனிக்கடையில், வழக்கம் போல் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது.மக்கள் வருவதும், போகும் போது பெரிய பெரிய கைப்பைகளில் நொறுக்கு தீனிகளை சுமந்து செல்வதுமாய் இருந்தனர்.
கடை வாசலில், நீண்ட நேரமாக எதுவும் வாங்காமலும், வாய் திறந்து பேசாமலும், கவலையுடன் நின்றிருந்தார், ஒரு மூதாட்டி.
உடல் மெலிந்த மாநிற தேகம். நல்ல உயரம், நைந்து போன நுால் சேலை, வெறுமையான நெற்றி, 65 வயதுக்கு மேல் இருக்கும். அவரைப் பார்த்தாலே, யாருக்கும் அனுதாபம் வரும். கையில் வைத்திருந்த மஞ்சள் பையை இறுக்கமாக பற்றியிருந்தார். வியாபாரத்துக்கு இடையில், ''உங்களுக்கு என்ன வேணும் பாட்டி?'' என்றபடி, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டிருந்தார், சந்திரன்.
மூதாட்டி கூறியது புரியாமல், ''ஏம்மா என்ன வேணும் உங்களுக்கு? எது கேட்டாலும் வாயைத் திறக்கவே மாட்றீங்க. சொல்ல வருவதும் புரியல. இந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க,'' என்று அதட்டலாகச் சொன்னார்.
''எனக்கு ஏதாவது வேலை இருக்குமா, ஐயா?'' என, தலையை சொறிந்தபடி கேட்டார், மூதாட்டி.
''என்னம்மா நீங்க, வியாபார நேரத்துல வந்து தொல்லை கொடுக்குறீங்க. வேலையுமில்லை, ஒண்ணுமில்லை. முதல்ல கிளம்புமா,'' என சத்தமிட்டார், சந்திரன்.
எப்படியாவது வேலை கிடைக்கும் என, நம்பி வந்த மூதாட்டியின் கண்கள் கலங்கியது. கண்ணீரை முந்தானையால் துடைத்தபடி நின்றிருந்தார்.
''ஏம்மா, சொல்றது புரியல. வியாபாரம் செய்யற இடத்துல, அழுது வடிஞ்சிக்கிட்டு... கிளம்புமா,'' என, பாட்டியை விரட்டுவதில் குறிக்கோளாக இருந்தார், சந்திரன்.
முதலாளி போட்ட சத்தம் காதில் கேட்டு, கடலை மாவு கலந்து பிசைந்து கொண்டிருந்த கற்பகம், நிமிர்ந்து பார்த்தாள். உடனே, முதலாளி சந்திரனிடம் ஏதோ கேட்க வருவது போல நைசாக எழுந்து வந்தாள். அவள் வரவும், மூதாட்டி அங்கிருந்து நகரவும் சரியாக இருந்தது.
''என்ன சார், யாரோ ஒரு பாட்டி, ஏதோ கேட்டுட்டு அழுதுக்கிட்டே போறாங்க,'' என்றாள், கற்பகம்.
''ம்ம்... வேலை ஏதாவது வேணுமாம். வயசான இந்தக் கிழவியை வேலைக்கு வச்சுக்கிட்டு, யார் அவஸ்தைப்படறது. உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாத வயசு. இதுல, இவங்களுக்கு என்ன வேலை கொடுக்கிறது? அதுசரி, உனக்கென்ன வேணும்.''
''ஏழு கிலோ கடலை மாவுக்கு, உப்பு கொஞ்சம் அதிகம் போட்டுட்டேன். அரிசி மாவு கொஞ்சம் சேர்த்து சரிகட்டிப் பார்க்கவா?''
''வேலைக்கு சேர்ந்து, எட்டு மாசமாகுது. இன்னமும், எது எதுக்கு என்ன அளவுன்னு தெரியாம இருக்கிற. அரிசி, பருப்பு விக்கிற விலையில், உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு, நான் என்ன செய்யறது? போ போ, நீ சொன்னது போலவே கலந்து போடு,'' என்று சலிப்புடன் சொன்னார், சந்திரன்.
பாட்டியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்த கற்பகத்துக்கு, முதலாளி கொடுத்த பாட்டு தான் மிஞ்சியது.
இரவு மணி, 7:00-
வேலையாட்கள் வீட்டிற்கு புறப்படத் தயாராகும் நேரம். அனைவரும் வரிசையில் நிற்க, கைப்பையை சோதித்து முடித்தாள், முதலாளியின் மனைவி.
யார் மீதும், எதிலும் கரிசனமோ, நம்பிக்கையோ, நெருக்கமோ காட்டாத முதலாளி குடும்பம் அது. 10 பேர் செய்ய வேண்டிய வேலைகளை, ஐந்து பேரை மட்டுமே வைத்து சமாளித்து, அடிமாட்டுக்கு சம்பளம் கொடுத்து வருபவர், சந்திரன்.
கோவிலில் ஒரு சந்திப்பு:
அன்று வெள்ளிக்கிழமை என்பதால், வழக்கமாக செல்லும் அம்மன் கோவிலுக்கு சென்றாள், கற்பகம்.கோவில் வாசலில், கடையில் வந்து வேலை கேட்ட, மூதாட்டி கவலையுடன் அமர்ந்திருந்தாள். ஆச்சர்யம் ஒருபுறம்; ஆனந்தம் இன்னொரு புறம். அருகில் அமர்ந்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தாள், கற்பகம்.
'பெயர் காமாட்சி...' என்று சொல்லிவிட்டு, கடைக்கு வந்து வேலை கேட்ட விபரத்தையும், அதற்கு முதலாளி சொன்ன பதிலையும் சொன்னாள், காமாட்சி.
''அம்மா, என் முதலாளி கல்லில் நார் உரிக்கும் வகையறா. இந்த வயசு ஆட்களை வேலைக்கு சேர்க்கவே மாட்டார்,'' என ஆரம்பித்து, காமாட்சி அம்மாவிடம் பேசத் துவங்கினாள். காமாட்சியின் பழைய கால வாழ்வும், தற்போதைய நிலையையும் கற்பகத்திடம் கூறினார்.
சற்று நேரம் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு, ''சரிம்மா, இப்போ என்ன செய்யப் போறீங்க?'' என்றாள், கற்பகம்.
''இப்படியே கோவில், குளம்ன்னு சுத்திட்டு, பிறகு வீட்டுக்குப் போவேன்.''
''என்னாம்மா சொல்றீங்க. வீட்டுல யாரும் தேட மாட்டாங்களா?''
மெல்லிய சிரிப்புடன், ''நான் ஒரு வாரம் வீட்டுக்கு போகலன்னாலும், யாரும் தேடமாட்டாங்க. கோவில், கோவிலா ஒரு மாசம் கூட சுத்துவேன். எங்க இருக்கேன்னு கேட்கக் கூட, நாதி இல்லை. என்னை ஒரு பாரமா நினைக்கறவங்க எப்படித் தேடுவாங்க, சொல்லு?
''உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும், ஏதாவது வேலை செய்து உழைத்துச் சம்பாதித்து சாப்பிடணும்ன்னு, வைராக்கியமா வாழறேன். எனக்கு கடவுள் அதுக்கு ஒரு வழிகாட்டினாப் போதும்,'' என்றார், காமாட்சி.
''அப்போ, என்னோடவே வந்துடுங்களேன்ம்மா,'' என அழைத்தாள், கற்பகம்.
''உனக்கு ஏம்மா வீண் சிரமம். உன் வீட்டில் தொந்தரவா நினைக்கப் போறாங்க.''
''அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்கம்மா. என் கணவரும், பிள்ளைகளும் என் பேச்சை ஒருபோதும் தட்டமாட்டாங்க. என் மீது அவ்வளவு அன்பு, நம்பிக்கை.''
சிறிது நேரம் யோசித்த பாட்டி, ''சரிம்மா வரேன்,'' என்றார்.
பாட்டியின் இந்த பதிலுக்காக காத்திருந்தது போல, கற்பகத்தின் முகம், சட்டென மலர்ந்தது. அப்போது, கற்பகத்தின் கணவர், தேவாவிடமிருந்து மொபைலில் அழைப்பு வந்தது.
வழக்கமாக வீட்டுக்கு செல்லும் நேரத்துக்கு வராததால், வந்த அழைப்பு அது. சட்டெனப் பரபரப்பான கற்பகம், பேருந்துக்கு காத்திராமல் ஆட்டோவை ஏற்பாடு செய்து, காமாட்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டாள்.
வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றதும், பதறி ஓடி வந்தான், தேவா. வயதான மூதாட்டியுடன் இறங்கியதை பார்த்ததும், ஒன்றும் விளங்கவில்லை. காமாட்சியை கணவருக்கும், பிள்ளைகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள், கற்பகம். அவரது முழு விபரத்தையும் கூறி, ''கொஞ்ச நாள் நம்ம வீட்டுல தான் பாட்டி இருப்பாங்க,'' என்றாள்.
தேவாவுக்குப் பதற்றம் சற்று குறைந்தது. இரவு உணவு முடித்து, அனைவரும் உறங்கப் போயினர். ஏதேதோ சிந்தனையில், கற்பகத்துக்கு அந்த இரவு சரிவர உறக்கம் இல்லை.
மறுநாள் விடிந்தது.
வழக்கமாக, காலை 5:30 மணிக்கு எழுந்து வேலைக்கு கிளம்பும் கற்பகம், அன்று நிதானமாக எழுந்தாள்.
சமையலறை தொட்டியில் கிடந்த சமையல் பாத்திரங்களை மெதுவாக கழுவி போட்டு கொண்டிருந்தாள், காமாட்சி. ''என்னம்மா நீங்க ஏன், இதையெல்லாம் செய்யறீங்க,'' என, பதறினாள், கற்பகம்.
''நான் தான் நேற்றே சொன்னேனேம்மா. உயிர் உடலில் இருக்கற வரைக்கும் உழைச்சிக்கிட்டே தான் இருப்பேன். இது என்ன சாதாரண வேலை தானே. ஆமா, நேரமாகுதே. நீ வேலைக்கு கிளம்பலையா?''v ''நான் வேலைக்கு போகலம்மா,'' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள், கற்பகம். தேவாவின் நான்கு சக்கர சிறிய ரக சரக்கு வாகனமும், சவாரிக்கு செல்லாமல் அன்று வாசலிலேயே நின்றிருந்தது.
முதலாளி சந்திரனிடமிருந்து, 9:30 மணிக்கு போன் அழைப்பு வந்தது. ''எனக்கு ஒரு வாரம், 'லீவு' வேணும் சார்.''
''என்னம்மா விளையாடுற. இருக்கிறதே, அஞ்சு பேர். இதுல எப்படி ஒரு வாரம், 'லீவு' தர முடியும். ஏன் என்னாச்சு உனக்கு?''
''என் அம்மா ஊரிலிருந்து வந்திருக்காங்க. அவங்க கூட இருக்கணும்.''
''உன் அம்மாவா? உனக்கு அம்மா இருக்காங்கன்னு இதுவரைக்கும் சொல்லவே இல்லையே.''
''அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார். ஒரு வாரம் கண்டிப்பா எனக்கு, 'லீவு' வேணும்,'' என்று கராறாக சொல்லி, இணைப்பை துண்டித்தாள், கற்பகம்.
முதலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி:
இதை கவனித்து கொண்டிருந்த காமாட்சி கண்களில், கண்ணீர் வழிந்தது. கற்பகத்தையும், தேவாவையும் அழைத்து, நீண்ட நேரம் ஏதோ ஆலோசனை செய்தாள், காமாட்சி.ஒருவாரம் போனதே தெரியவில்லை. பரபரப்பும் வேலைபளுவும் இருந்ததால், முதலாளியிடம் இருந்து வந்த தொடர் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தாள், கற்பகம்.
நான்கு வாரங்கள் கடந்த நிலையில், திடீரென கற்பகம் வீட்டு வாசலில், சந்திரனின் இரு சக்கர வாகனம் வந்து நின்றது.
வாசலில், ஒரு பெரிய கண்ணாடிப் பேழையில், கைமுறுக்குகள், நொறுக்குத் தீனிகள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் அதிர்ந்து போனார், சந்திரன்.
வியாபாரத்திற்கு கடைகளுக்குப் போட, தேவாவின் நான்கு சக்கர சரக்கு வாகனத்தில் நொறுக்குத் தீனிப் பொட்டலங்களை ஏற்றிக் கொண்டிருந்தாள், கற்பகம்.
வாசலில் மாட்டியிருந்த போர்டை பார்த்த, சந்திரனால் வியப்பை அடக்க முடியவில்லை. வீட்டிலேயே புதியதாக, நொறுக்குத் தீனி நிறுவனம் துவங்கியதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
'அன்னபூரணி கைமுறுக்குக் கடை' என்ற கடையின் பெயரைப் பார்த்ததும், சந்திரனுக்கு பேரதிர்ச்சி.
சட்டென, கற்பகத்தை அழைத்து, ''என்ன கற்பகம் இதெல்லாம்? பெரிய பிரச்னையாகும். முதலில் அந்த கடைப் பலகையை கழட்டு,'' என்றார், சந்திரன். ''ஏன், யார் சார் பிரச்னை செய்வா, என்ன சொல்றீங்க?''
''நீ, கடை தொடங்கியது ஒண்ணும் பிரச்னை இல்ல. ஆனா, ஏற்கனவே ஊருக்கே நல்லாத் தெரிந்த ஒரு பிரபலமான கடையின் பெயரை உன் கடைக்கு வெச்சிருக்கியே. அதுக்கு காப்புரிமை எல்லாம் இருக்கும். அதுதான் பிரச்னை,'' என்றார்.
சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள், காமாட்சி.
''இவங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே...'' என இழுத்தார், சந்திரன்.
''இவங்க தான் இந்த நிறுவனத்தின் முதலாளியம்மா. பேரு காமாட்சி,'' என்று கற்பகம் சொன்னதும், காமாட்சியை உற்றுப் பார்த்தார்.
''ஒரு மாதத்துக்கு முன், உங்களிடம் வேலை கேட்டு வந்த மூதாட்டி தான் இவங்க,'' என்றாள், கற்பகம்.
''ஓ... அவங்களா இது. இவங்க முதலாளியா. என்ன சொல்ற, கற்பகம்?''
''சார், அதுமட்டுமில்ல. நீங்க சொன்ன அந்த பிரபலமான, 'அன்னபூரணி கைமுறுக்கு' நிறுவனமே இவங்களுடையது தான். ஏதோ காலச்சூழலில் தொடர்ந்து நிறுவனம் நடத்த முடியாம போச்சாம். கஷ்டத்துல வேலை கேட்டு தான், உங்ககிட்ட வந்திருக்காங்க. நீங்க விரட்டி விட்டுட்டீங்க,'' என, கற்பகம் கூற, சந்திரனுக்கு வியர்த்து கொட்டியது.
''ஐயா, உங்க நிறுவனத்துக்கு ஏதாவது கூடுதலா பொருட்கள் வேணும்ன்னா, எங்ககிட்ட சொல்லுங்க. சுவை நல்லாவே இருக்கும்,'' என்ற காமாட்சியின் குரலில் கம்பீரமும், தெளிவும் இருந்தது.
'வேலை கேட்டு வந்த அன்றைக்கே, கிழவிக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுத்திருந்தா, இதெல்லாம் நடந்திருக்காது. அவசர புத்தியால, நல்ல தொழில் தெரிஞ்ச மனுஷிய இழந்துட்டேன்...' என, முணுமுணுத்துக் கொண்டே, தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்தார், சந்திரன்.
SPONSORSHIP:
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication







0 Comments
Post a Comment
Thank U for Visit My Story Blog.. I hope U enjoy it...