சித்திரைப் புத்தாண்டை மாற்றிய கருணாநிதியின் செயல் தந்திரமானது என்று வர்ணித்த ஜெயலலிதா, அதற்கு ஒரு புளி வியாபாரக் கதையை கூறினார்.

புளி வியாபாரம்:

ஒரு சிற்றூரில் கோபாலன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வந்தார். அவர் தனது வியாபாரத்தை நேர்மையுடன் நடத்தி வந்தார்.

தன் கடையில் பொருட்களை வாங்க வருவோர் விலையை குறைத்து கேட்டால், அந்த பொருட்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பதையும்; தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் அவர் தெரிவித்து விடுவார்.

வியாபார நுணுக்கம் தெரியாததால் கடையில் எதிர்பார்த்த லாபம் அவருக்கு கிட்டவில்லை. எனவே, பக்கத்து ஊரில் வியாபார நுணுக்கம் தெரிந்து அதிக லாபம் ஈட்டும் அம்பலம் என்பவரை அணுகி, வியாபார நுணுக்கங்களை தன் மகன் கண்ணனுக்கு கற்றுத் தருமாறு கேட்டார் கோபாலன். அம்பலமும், அவனுக்கு வியாபார நுணுக்கங்களை கற்றுத் தருவதாக கூறினார்.

இதன்படி, தன் மகன் கண்ணனை அம்பலம் கடைக்கு அனுப்பி வைத்தார் கோபாலன்.

தொழில் ரகசியம்:

வியாபார ரகசியத்தை கற்றுக் கொள்ள வந்த கண்ணனிடம், "என்னுடைய ஒவ்வொரு செயலையும் உற்றுப் பார். எதையும் மற்றவர் முன் கேட்காதே. யாரும் இல்லாத போது கேள்'', என்று அறிவுரை வழங்கினார் அம்பலம்.
சற்று நேரத்தில் அம்பலத்தின் கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தார்.

அவர் கண்ணனிடம், "உயர் ரக புளியின் மாதிரியைக் காட்டு'' என்றார். உடனே கண்ணன், உயர் ரக புளியின் மாதிரியைக் காட்டினான்.

வாடிக்கையாளரின் முகம் மாறியது. "இதைவிட நல்ல புளி இருக்கிறதா? விலை அதிகமாக இருந்தாலும், பரவாயில்லை'' என்று கேட்டார் வாடிக்கையாளர்.

அதற்கு கண்ணன், "இது தான் மிகவும் உயர் ரக புளி. இதை விட உயர் ரகம் வேறு இல்லை'' என்றான்.

அரசியல் தந்திரம்:

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பலம், கண்ணனிடம் "இவர் இந்த ஊரில் மிகப் பெரிய மனிதர். இவருக்கு எப்பொழுதும் மிக உயர்ந்த ரக பொருட்கள் தான் பிடிக்கும். விலையைப் பற்றி அவருக்கு கவலை இல்லை'' என்று கடிந்து கொண்டு, "அந்த எவர்சில்வர் டிரம்மில் உள்ள புளியை அவருக்கு எடுத்துக் காட்டு'' என்று கூறினார்.
கண்ணன் குழப்பத்துடனே உள்ளே சென்று, எவர்சில்வர் டிரம்மில் இருந்த புளியை எடுத்துக் காட்டினான்.

இதைப் பார்த்ததும், அந்த வாடிக்கையாளரின் முகம் தாமரை போல் மலர்ந்தது. பின்னர், அவர் தனக்கு தேவையான புளியை வாங்கிச் சென்றார்.

வாடிக்கையாளர் சென்றதும், கண்ணன் அம்பலத்திடம், "இரண்டு புளியும் ஒரே ரகம்; ஒரே விலை தான். வேறு, வேறு டிரம்களில் இருந்தன அவ்வளவு தானே?'' என்று கேட்டான்.
அதற்கு அம்பலம், "நல்ல புளி என்பதை வாடிக்கையாளர் மனதில் நான் பதிய வைத்தேன். இதுதான் வியாபார தந்திரம்'' என்று கூறினார்.

இந்த வியாபாரி செய்தது வியாபார தந்திரம். அரசியலில், இது போல் தந்திரம் செய்பவர்கள் தமிழுக்கு தொண்டு செய்வது போல் காட்டிக் கொள்கின்றனர்," என்றார்.

இந்த கதையை வீடியோவடிவில் பார்க்க: