இரண்டு நண்பர்கள்: விபுல் || சந்திரகாந்தன்

விபுலும் சந்திரகாந்தனும் நண்பர்கள். விபுல் பெரும் பணக்காரன், சந்திரகாந்தனோ ஏழை. ஆனால் ஆருயிர் நண்பர்கள் என்பதால் இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்வார்கள்.

ஒருநாள் அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் ஒருவன் அவர்களை அணுகி "நான் வெளியூரான். எனக்கு அவசரமாகப் பணம் தேவைப் படுகிறது. இந்த மோதிரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கிறீர்களா?" என்று கேட்டான்.

விபுல் வெளியூரானிடம் பெற்ற வைர மோதிரம்:

விபுலும் அந்த மோதிரத்தை வாங்கிப் பார்த்தான். அதன் வைரக்கற்கள் ஜொலித்தன. அதை வாங்கிக் கொள்ளத் தீர்மானித்து அதன் விலையைப் பேசி முடித்துவிட்டான். பின் விபுலன் வெளியூர்காரனிடம், "சரி. இது உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று கேட்டான்.

வெளியூர்க்காரனோ "அதைப் பற்றி என்னால் சொல்ல இயலாது. நீங்கள் வாங்கிக் கொள்வதானால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் வேறு யாருக்காவது விற்கிறேன்" என்றான்.

விபுலுக்கு அதை விட்டு விட மனம் இல்லை. அதனால் விபுல் "சரி. என் வீட்டிற்கு வா. பணம் கொடுகிறேன்'' என்று கூறி அவனையும் சந்திரகாந்தனையும் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போனான்.
அங்கு விபுல் வெளியூரானிடம் பணத்தைக் கொடுத்தவாறே "இந்தப் பெருந்தொகையோடு இந்த இரவு வேளையில் நீ புறப்பட்டுச் செல்வது ஆபத்து. அதனால் இங்கே தங்கி சாப்பிட்டுத் தூங்கி விட்டு நாளைக் காலையில் நீ போகலாம்" என்றான். சந்திரகாந்தனும் “என் நண்பன் கூறுவது சரியே. இன்றிரவு இங்கே தூங்கி விட்டு நாளை போவதே உங்களுக்கு நல்லது" என்று கூறவே வெளியூரானும் அதற்கு இசைந்தான்.

சந்திரகாந்தன் தன் நண்பனிடம் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டான்.

விபுல் கொடுத்த சரக்கு, வெளியூரான் கொடுத்த துப்பு:

விபுல் வெளியூரானுடன் சாப்பிட உட்கார்ந்தான். உணவு உண்டபின் விபுல் வெளியூரானுக்கு நிறைய மதுவைக் கொடுத்துக் குடிக்க வைத்தான்.
அதைக் குடித்த வெளியூர்காரன் சற்று நேரத்திற்குப் பின் போதை வெறியில் பிதற்றலானான். அந்தப் பிதற்றலில் அவன் தனக்கு அந்த மோதிரம் எப்படிக் கிடைத்தது என்பதைக் கூறினான்.

மோதிரம் வாங்கிய Flashback:

அந்த ஊரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள காட்டில் ஒரு மாந்திரீகன் ஒவ்வொரு அமாவாசையன்றும் வந்து ஒரு ஹோமம் செய்வானாம். ஹோமம் முடிந்ததும் அவனுக்கு மூன்று வரங்களைப் பிறருக்குக் கொடுக்கும் சக்தி வந்து விடும்.
அந்த மாந்திரீகனுக்கு வெளியூரான் பணி விடை செய்து அவனது அன்பிற்குப் பாத்திரமானான்.

மாந்திரீகனும் ஹோமம் முடிந்ததும் ஒரு சிட்டிகை சாம்பலை ஹோம குண்டத்திலிருந்து எடுத்து அவனிடம் கொடுத்து "நீ மூன்று நொடிகளுக்குள் நீ விரும்பும் மூன்று வரங்களைக் கேள். கொடுக்கிறேன்" என்றான். வெளியூரானுக்கு எதைக் கேட்பது என்று சட்டெனத் தெரியவில்லை. ஒரு வரமாவது கேட்போம் என்று நினைத்து அவன் ஒரு விலையுயர்ந்த வைரமோதிரத்தைக் கேட்டான்.
அந்த மோதிரத்தைத் தான் அவன் விபுலனுக்கு விற்றான். இதெல்லாம் வெளியூரான் குடிபோதையில் கூறியது.

விபுல் சந்திரகாந்தனுக்கு விடுத்த அழைப்பு:

மறுநாள் காலையில் வெளியூரான் எழுந்து சென்றதும் விபுல் தன் நண்பன் சந்திரகாந்தனின் வீட்டிற்குப் போய் தான் தெரிந்து கொண்ட விஷயத்தை அவனிடம் கூறினான்.

பிறகு அவன் "வரப்போகும் அமாவாசையன்று நாம் இருவரும் காட்டிற்குப் போய் அந்த மந்திரவாதியைப் பார்க்கப் போகிறோம். அவனுக்குப் பணிவிடைகள் செய்து ஹோமம் முடிந்ததும் மூன்று வரங்களைக் கொடுக்கும்படி அவனிடம் கேட்கப் போகிறேன்.

என்ன வரங்கள் கேட்க வேண்டும் என்று யோசித்து வைத்திருப்பதால் வெளியூர்க்காரன் திகைத்தது போல இராமல் மூன்று வரங்களையும் கேட்டுப் பெற்று இன்னமும் பெரிய பணக்காரனாகி விடுவேன். அமாவாசை அன்று என்னுடன் காட்டிற்கு நீ வரவேண்டும்" என்றான்.

சந்திரகாந்தனும் 'நண்பா! உன்னிடமோ நிறையப் பணம் இருக்கிறது. இன்னமும் பணம் வேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறாய்? மேலும் மந்திரதந்திரங்களால் கிடைப்பவை நிலைத்து நிற்காது அதோடு ஆபத்தையும் விளைவிக்கும். அதனால் இந்த எண்ணத்தை விட்டு விடு" என்றான்.
விபுலோ "முடியாது. நான் காட்டிற்குப் போய் மாந்திரீகனை கண்டு கண்டிப்பாக வரங்களைக் கேட்டு வாங்கியே வருவேன். நீ என்னோடு வந்தே தீரவேண்டும்" என்றான்.

சந்திரகாந்தனும் "நான் எதற்குக் காட்டிற்கு வர வேண்டும்? வரங்களை வாங்கப் போகிறவன் நீ. அதனால் நீ மட்டும் போனால் போதுமே. என்னை ஏன் வரச் சொல்கிறாய்?" என்றான். விபுலனோ "நீ என் ஆருயிர் நண்பன். எனக்கு வழித் துணைக்கும் பேச்சுத் துணைக்கும் நீ வந்தால் தான் எனக்குத் திருப்தியாக இருக்கும்" என்றான்.

அதைக் கேட்ட சந்திரகாந்தனும் 'நீ சொல்வது சரியே. காட்டில் உனக்கு ஏதாவது நேர்ந்தால் உனக்கு உதவலாம்" என்றான். அதன் பின் காட்டில் விபுலனுக்குத் துணையாகப் போவதே நல்லது என்று எண்ணி அவனோடு செல்ல இசைந்தான்.

மாந்திரீகனை காண காடு நோக்கிய பயணம்:

அமாவாசையன்று காட்டிற்குப் போய் மாந்திரீகளைக் கண்டு பிடித்து இருவரும் அவனை வணங்கினார்கள்.
மாந்திரீகனும் "யார் நீங்கள்? என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

விபுலும், "நீங்கள் சக்திவாய்ந்தவர். இன்று ஹோமம் செய்யப் போகிறீர்கள். ஹோமத்தின் முடிவில் பிறருக்கு மூன்று வரங்களை கொடுக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். நான் உங்களுக்குப் பணிவிடை செய்து மூன்று வரங்களைப் பெற ஆசைப் படுகிறேன். நீங்கள் அவற்றைக் கொடுத்தே ஆகவேண்டும்" என்றான்.

அப்போது மாந்திரீகன் "ஓஹோ! சென்ற அமாவாசையன்று என்னிடம் மோதிரத்தைக் கேட்டு வாங்கிப் போனவன் என் ரகசியத்தை உன்னிடம் கூறி விட்டானா? அதை அறிந்து கொண்டு தான் நீ வந்திருக் கிறாயா?" என்று கேட்டான்.

விபுலனும், "ஆமாம். நான் உங்களுக்குப் பணிவிடை செய்யப் போகிறேன். அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு வரங்களைக் கொடுக்கத்தானே வேண்டும். அது தானே முறை" என்றான்.

மந்திரவாதியோ, 'கடகட'வென்று சிரித்து 'ஓ! முறை பற்றி எனக்கு எடுத்துக் கூறுகிறாயா? சரி எல்லாம் முறையாகவே நடக்கும்" எனக் கூறி மாந்திரீகன் ஹோமத்தைச் செய்ய விபுலும் அப்போது அவனுக்குக் குற்றேவல்கள் புரிந்தான். ஹோமம் முடிந்தது.
மாந்திரீகன் சிட்டிகை சாம்பலை எடுத்து விபுலிடம் கொடுத்து "மூன்று நொடிகளுள் மூன்று வரங்களைக் கேள்" என்று கூறினான்.

விபுலும் 'மளமள'வென்று மூன்று வரங்களைக் கேட்டான். மாந்திரீகனும் "சரி நீ கேட்டவற்றைக் கொடுத்தேன். இனி நீ போகலாம். அவை பலிக்கும்" என்றான்.

விபுல் பெற்ற வரங்கள்:

விபுலும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த தன் நண்பன் சந்திரகாந்தனிடம் "நான் மூன்று வரங்களை வாங்கி வந்து விட்டேன்" என்றான். சந்திரகாந்தனும் "அப்படியா? அவை என்னென்ன?" என்று கேட்டான்.

விபுலனும் "என் முதலாவது வரம் நான் ஒரு மன்னனாக வேண்டும் என்பது" என்றான்.
சந்திரகாந்தனும் ''சரி. மன்னனாகி விடுவாய். இரண்டாவது வரம் என்ன?" என்று கேட்டான்.

விபுலும் எனக்கு எந்த நோய் நொடியும் வரக்கூடாது என்பதே" என்றான். சந்திரகாந்தனும் "ரொம்ப சரி. மூன்றாவது வரம் என்ன?" என்று கேட்டான்.
விபுலும் "நான் கிழவனாகாமல் இதே நிலையில்தான் இறக்க வேண்டும்" என்று கூறி முடித்ததுமே அவன் சந்திரகாந்தன் மீது சாய்ந்து விட்டான்.
ஆம் அதே நிலையில் விபுல் இறந்து தான் போயிருந்தான். சந்திரகாந்தன் அவனுக்காகக் கண்ணீர் விட்டான்!



MORAL:

வாழ்வில் திருப்தி ஒரு பெரிய செல்வம். பேராசை, பலமுறை நல்லவை போலத் தோன்றினாலும், அதைத் தொடரும் போது ஆபத்தான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.